இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தென்மேற்கு பருவமழை கேரளாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. வழக்கமாக ஜூன் 1ஆம் தேதியில்தான் பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்னதாகவே, மே 24ஆம் தேதி பருவமழை துவங்கியுள்ளது. இது 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக முன்கூட்டியே பருவமழை துவங்கிய நிகழ்வாகும். கடந்த 2009ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி பருவமழை துவங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக கனமழை
அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மே 20ஆம் தேதி கோவா அருகே உருவான குறைந்த காற்றழுத்த மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்தமாக மாறி, ரத்னகிரி மற்றும் டபோலி இடையே கரையை கடக்கவுள்ளது. இது மணிக்கு 6 கிமீ வேகத்தில் நகர்ந்து வருவதால், மேலும் பல இடங்களில் மழை தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்திற்கு பலத்த மழை எச்சரிக்கை
தமிழகத்தில் கோவை, நீலகிரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல் மற்றும் குமரி மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிகுந்த கனமழை ஏற்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் நேற்று மாலை தொடங்கிய மழை, இன்று காலை வரை இடைவிடாது தொடர்ந்தது. தூத்துக்குடி, தென்காசி, நெல்லை மாவட்டங்களிலும் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி பொதுமக்களுக்கு குளிப்பதற்கான அனுமதி இரண்டாவது நாளாக இன்று மறுக்கப்பட்டுள்ளது.
மீட்பு குழுக்கள் களத்தில்
கோவையில் பல இடங்களில் காற்றுடன் கூடிய மழை காரணமாக மின்கம்பிகள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் மீளமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், “மழை பாதிப்பை கருத்தில் கொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன,” என தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை அவசியம்
பொதுமக்கள் அவசர தேவையின்றி வெளியே செல்லாமல் இருக்க வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்து, அரசு அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

