அஜித்குமார் கொலை வழக்கில் உயரதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பதை விரிவாக விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

நகை திருட்டு புகாரில் சிவகங்கையை சேர்ந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞர் போலீசார் விசாரணையின் போது பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான குற்றப்பத்திரிக்கையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என சி.பி.ஐக்கு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி அஜித்குமார் மரணம் தொடர்பான விசாரணையை தீவிரமாக சி.பி.ஐ. விசாரித்தது. நேற்று குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதுதொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று வந்தது.

வழக்கை விசரித்த நீதிபதிகள், “நிகிதா புகார் தொடர்பான ஆவணங்களை ஒரு வாரத்தில் சி.பி.ஐ.யிடம் உள்ளூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும். அதன்பேரில் சி.பி.ஐ. வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும். அஜித்குமார் கொலை வழக்கில் தடய அறிவியல் சோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்ற உடன், இந்த கொலை வழக்கில் உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

மேலும் நீதிபதிகள், இந்த வழக்கில் போலீசார் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு உள்ளன. எனவே பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது அவசியம். அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை தொடர்ந்து கண்காணிப்போம்” என உறுதி அளித்தனர்.

பின்னர், “அஜித்குமார் கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ. முறையாக நடத்தி வருகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது பாராட்டத்தக்கது. பல்வேறு கட்ட விசாரணை முடிந்தபோதும் மேலும் பல கேள்விகள் குறித்தும் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். அதுதொடர்பான விசாரணையையும் அறிக்கையாக இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதம் 24-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version