கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் திருக் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தொடர்ந்து நாள்தோறும் விழாக்கள் விமர்சையாக நடைபெற்றது.

இன்று (டிச. 3) அதிகாலை, 4 மணிக்கு, சுவாமி கருவறை எதிரில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. முக்கிய நிகழ்வாக இன்று (டிச. 3) மாலை அண்ணாமலையார் கோயிலில் 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில், கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’  என பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு மகா தீபத்தை கண்டு வழிபட்டனர்.

முன்னதாக மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை பாதுகாப்புடன் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபம் ஏற்ற,  4,500 கிலோ நெய் மற்றும், 1,150 மீட்டர் காடா துணியால் ஆன திரி தயார் செய்யப்பட்டது. விழாவை முன்னிட்டு, சுவாமி சன்னிதி முழுவதும், பல்வேறு வண்ணங்களில், மலர்களால் தோரணங்கள் கட்டப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டன. கோயில் வளாகம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டன.

அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதை, பக்தர்கள் பரவசத்துடன் கண்டு களித்து, சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version