கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், திமுக ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற 181-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திவருகின்றனர். ஆட்சிக் காலம் முடிய இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதேபோல், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 26-ந் தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறையில் போராட்டம் தொடங்கிய நிலையில் பள்ளிகள் திறந்த பின்பும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு அறிவித்தது. இதனால் கோபமடைந்த ஆசிரியர்கள், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில், இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் மேலும் ரூ.2,500 உயர்த்தப்படுவதாக ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் பகுதி நேர ஆசிரியர்களின் ஊதியம் ரூ.12,500 ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 12 ஆண்டுகளாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் வழங்கப்படுவதில்லை என்று கூறிய அவர், மத்திய அரசின் நிதி வந்தால் ஆசிரியர்கள் கேட்காமலே செய்திருப்போம் என்று பதிலளித்துள்ளார்.
