டெல்லியில் எல்.முருகன் வீட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பொங்கல் வாழ்த்தை தமிழில் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றும் டெல்லியில் உள்ள இல்லத்தில் பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன், பராசக்தி படக்குழுவினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி பொங்கல் நல்வாழ்த்துகள் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார். சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விழாதான் இந்த பொங்கல் பண்டிகை. இதையொட்டி அனைத்து தமிழ் சகோதர சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தின் கங்கை கொண்ட சோழபுரத்தில் பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதார பண்டிகை இது” என்று கூறியுள்ளார்.
உலகின் பழமையான தமிழ் கலாச்சாரம் இந்தியாவின் பெருமை என்று புகழ்ந்த பிரதமர் மோடி, தமிழ் சமுதாயம் விவசாயிகளை வாழ்வின் ஒரு அங்கமாக கருதுவதாக தெரிவித்தார். விவசாயிகளுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறிய அவர், வாழ்க தமிழ், வாழ்க பாரதம் என்று தமிழிலேயே கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.
