வருமானத்தை மறைத்ததாகக் கூறி, நடிகர் விஜய்க்கு வருமான வரித்துறை விதித்த ரூ. 1.50 கோடி அபராதம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும், வருமான வரித்துறையின் அபராதத்துக்கு எதிராக விஜய் தாக்கல் செய்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தற்போதைய தமிழக வெற்றிக்கழக தலைவரான நடிகர் விஜய் கடநத 2016-2017 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்தாா். அதில், அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35,42,91,890 ஈட்டியதாக குறிப்பிட்டிருந்தாா். அந்த வருமான வரிக் கணக்கை 2015-ஆம் ஆண்டில் நடிகா் விஜய் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் அதிகாரிகள் ஒப்பிட்டுப் பாா்த்த போது ’புலி’ திரைப்படத்தில் நடித்ததற்காக விஜய் பெற்ற ரூ.15 கோடி வருமானம் கணக்கில் காட்டப்படாமல் இருப்பதை கண்டுபிடித்தனா்.

இதையடுத்து, ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து விஜய் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம் வருமான வரித் துறை உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில், நடிகர் விஜய்க்கு அபராதம் செலுத்த கோரி 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்னதாகவே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். ஆனால் கால வரம்பை மீறி வருமானவரித்துறை 2022 ஆம் ஆண்டு நோட்டீஸ் வழங்கியது. இதனால் அந்த அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்று விஜய் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. அதே மறுபுறம், சட்டப்பிரிவு 271 AAB(1) படி தான் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனவே விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் என்று வருமான வரித்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டு வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில் விஜய் மீதான இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, “வருமான வரிச் சட்டத்தின் 263-வது பிரிவின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தான் வருமான வரித்துறை அனுப்பியுள்ளது. நோட்டீஸ் வழங்கப்பட்டதில் எந்த குறைபாடும் இல்லை” எனத் தெரிவித்தார். மேலும், வருமான வரித்துறையின் உத்தரவுக்கு எதிராக விஜய் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து “மேல்முறையீடு செய்ய அனுமதிக்க வேண்டும்” என விஜய் தரப்பில் கோரப்பட்ட போது, “வருமான வரித்தறை விதித்த அபராத உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை (Appellate Authority) விஜய் அணுகலாம்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

“ஊழலில்லாத ஆட்சியை கொடுப்பேன்” என தனது கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விஜய் பேசிவரும் இச்சூழலில் ‘வருமான வரி ஏய்ப்பு; அதற்கான அபராதம்’ என விஜய்க்கு எதிராக திரும்பியுள்ள இவ்வழக்கு விஜய்க்கும் தமிழக வெற்றிக்கழகத்திற்கும் பின்னடைவை கொடுத்துள்ளது. இதை ‘தவெகவினர் எப்படி சமாளிக்க போகிறார்கள்?’ என்பதே அடுத்த கேள்வி…

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version