விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை ஆபாசமாக விமர்சித்த ஆ.ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தியுள்ளார்.

தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) இடம்பெற்றுள்ள நிலையில், திமுக எம்.பி ஆ.ராசா தனது சமூக ஊடகப் பக்கத்தில் விசிகவை கடுமையாக விமர்சனம் செய்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆ.ராசா தனது பதிவில்,

”முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’

மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’

வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு

முட்டுக் கொடுக்குமென்றால்;

பூ முடித்தவனை புறந்தள்ளி —

புணர்ச்சிக்கு வேறிடம்

தேடுவதில் தவறில்லை!” என்று காட்டமாக  குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு பலரது கண்டனத்துக்கு உள்ளானதைத் தொடர்ந்து, ஆ.ராசா அதை உடனடியாக நீக்கினார்.

இந்நிலையில், தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆ.ராசாவின் நடவடிக்கையை தீவிரமாகக் கண்டித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக நின்று, பெரும்பான்மை இல்லாத சூழலிலும் அதிமுக ஆதரவை நாடாமல், அண்ணா கனவு கண்ட அமைச்சரவையை உருவாக்கியிருக்கிறார் விஜய். இந்திய அளவில் பாராட்டப்படும் அமைச்சரவை இது” என்று தெரிவித்தார். மேலும், “அண்ணன் திருமாவளவன் மீதான ஆ.ராசாவின் விமர்சனத்தை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். எதிர்க்கட்சி அரசியலை வரவேற்கிறோம். ஆனால், ஒரு கட்சித் தலைவரையோ, தொண்டர்களையோ அல்லது தனிநபரையோ பெண்களின் உறவை மையப்படுத்தி விமர்சிப்பது பெரியாரும் அண்ணாவும் கற்றுக்கொடுத்த அரசியல் அல்ல” என்று ஆதவ் அர்ஜுனா வலியுறுத்தினார்.

திமுக-வின் 75 ஆண்டு கால ஜனநாயக பண்பாட்டை சுட்டிக்காட்டிய அவர், “கடமை, கண்ணியம், குணம் என்று பேசும் திமுக-வுக்கு இந்த நடவடிக்கை அழகல்ல. கலைஞரின் கோட்பாடுகளை மறந்துவிட்டதாகவே தெரிகிறது. ஸ்டாலின் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பினார். ஆ.ராசா தமிழக மக்களிடமும், திருமாவளவன் உள்ளிட்ட விசிக தலைவர்களிடமும் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆதவ் அர்ஜுனா, “பெண்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் கனிமொழி இந்தப் பதிவுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version