தஞ்சாவூர் அருளாந்த நகர் பகுதியில் உள்ள பிரபல கே.எஃப்.சி (KFC) சிக்கன் கடையில் ஏசி கம்ப்ரஸர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கடையில் இருந்த ஏசி இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதால், அதனைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. அப்போது ஏசியின் அவுட்டோர் யூனிட்டில் கேஸ் நிரப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக கேஸ் கசிவு ஏற்பட்டு கம்ப்ரஸர் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் ஏசி பழுது பார்க்கும் தொழிலாளி கணேசன், கடையில் பணிபுரியும் ஊழியர்களான அருண்குமார், ரவிராஜ் மற்றும் டெலிவரி ஊழியர்களான பிரேம், கதிரேசன் உள்ளிட்ட ஐந்து பேர்  பலத்த காயமடைந்தனர்.

விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் தஞ்சை தீயணைப்புத் துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரவிராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கோர விபத்து குறித்து தஞ்சை தெற்கு காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version