மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24ம் தேதி அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இதனை முன்னிட்டு திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி ஆகியவை நேரடியாக களம் காண்கின்றன. அதன் ஒருபகுதியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகளை அரசியல் கட்சிகள் வேகப்படுத்தியுள்ளனர். ஆளும் திமுகவின் பிரச்சாரப் பயணம் தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவும் தனது தேர்தல் தயாரிப்புகளைப் படிப்படியாக வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது.
அந்தவகையில் முதல் ஆளாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 109வது பிறந்தநாளையொட்டி, தேர்தல் வாக்குறுதியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போதுவரை 2 கட்டங்களாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்தடுத்த நகர்வுகளில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார். அதாவது, வழக்கமாக அரசியல் கட்சிகள் பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை பெற்று தேர்தல் அறிக்கையை ஒரு புத்தகமாக வெளியிடுவர். ஆனால் தற்போது பல்வேறு கட்டங்களாக வெளியிடுவது புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆளும் திமுகவெளியிடப் போகும் தேர்தல் அறிக்கைக்கு நெருக்கடியாக கூட இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் அடுத்த அதிரடியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24ம் தேதி அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பதி சென்ற எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் பட்டியலை வைத்து தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, அதிமுக கட்டாயம் போட்டியிடும் என்று கூறப்படும் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும், கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகள் நீங்கலான தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு விவரத்தையும் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தேர்தல் வாக்குறுதி பாணியில் திமுகவிற்கு முன்னதாக வேட்பாளர்களையும் அறிவிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
