2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. இதில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க முக்கிய முகங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் பா. வளர்மதி, அண்ணா நகரில் எஸ். கோகுல இந்திரா போன்ற முன்னாள் அமைச்சர்களும், தியாகராய நகரில் பி. சத்தியநாராயணன், வேளச்சேரியில் எம்.கே. அசோக் மற்றும் சோழிங்கநல்லூரில் கே.பி. கந்தன் போன்ற அனுபவம் வாய்ந்த நிர்வாகிகளும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஆர்.கே. நகர் தொகுதியில் ஆர்.எஸ். ராஜேஷும், வில்லிவாக்கத்தில் எஸ்.ஆர். விஜயகுமாரும் போட்டியிடுவது அதிமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தலைநகர் சென்னையின் முக்கிய தொகுதிகளான துறைமுகத்தில் ராயபுரம் ஆர். மனோ, விருகம்பாக்கத்தில் வி.என். ரவி மற்றும் கொளத்தூர் தொகுதியில் பி. சந்தானகிருஷ்ணன் ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர். அத்துடன் தனித்தொகுதிகளான திட்டக்குடியில் என். முருகுமாறன், திரு.வி.க நகரில் ஏ. பொற்கொடி மற்றும் எழும்பூரில் அபிஷேக் ரங்கசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தென்மாவட்டமான திருச்சுழியில் எம்.எஸ்.ஆர். ராஜவர்மனும், ஆலங்குடியில் தன. விமலும் போட்டியிடுகின்றனர். அனுபவம் மற்றும் இளமை கலந்த இந்த வேட்பாளர் பட்டியல், அதிமுகவின் தேர்தல் வியூகத்தை வலுப்படுத்துவதோடு, களப்பணியை வேகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

சென்னை திரு.வி.க நகர் (தனி) தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக ஏ. பொற்கொடி அறிவிக்கப்பட்டுள்ளார். மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கின் மனைவியான இவர், தற்போது அதிமுகவில் இணைந்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். நீண்ட காலத்திற்குப் பிறகு இத்தொகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்கில் அதிமுக தலைமை இவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. இப்பகுதியில் இவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் அனுதாப அலை அக்கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version