முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் மீது அறப்போர் கொடுத்த புகாரில் கூடுதல் ஆதாரங்களை அமலாக்கத்துறை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பியுள்ளது.
கடந்த 2011-2021-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்ற போது, 2011-2016-ம் ஆண்டு வரை வீட்டு வசதிவாரிய அமைச்சராக வைத்திலிங்கம் பொறுப்பு வகித்து வந்தார். அப்போது 2015-2016 காலகட்டத்தில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டிஸ்-இன் 57.94 ஏக்கர் நிலத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுவதற்கான திட்ட அனுமதிக்கு வைத்திலிங்கம் ரூ.28கோடி லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அறப்போர் இயக்கம் அளித்த புகரில் வைத்திலிங்கம் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. வைத்திலிங்கம் மட்டுமின்றி மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையில் வைத்திலிங்கம் மற்றும் அவரது மகன்கள் மீது 2011-2016 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிமகாக ரூ.33கோடி சொத்து சேர்த்ததாக தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இரண்டு ஆண்டு தாமதத்திற்கு பிறகு லஞ்ச வழக்கில் முதல் தகவல் அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை செப்டம்பர் 2024 பதிவு செய்தது.
சொத்து குவிப்பு வழக்கிலும் ஒரு FIR பதிவு செய்யப்பட்டது. அதன்பிறகும் கூட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைக்கு செல்லவில்லை.
சோதனைக்கு சென்ற அமலாக்கத்துறை ரூ.100 கோடி மதிப்பிலான வைத்தியலிங்கம் சம்பந்தப்பட்ட சொத்தை வழக்குடன் சேர்த்தது. மேலும் தற்பொழுது ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டிஸ் கொடுத்த அந்த பணம் போலி ஸ்கிராப் நிறுவனங்கள் (shell companies) மூலமாக ரொக்கமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டு அந்த பணத்தின் மூலமாக ஸ்ரீராம் ப்ராப்பர்ட்டிஸ் இன் பாரத் கோல் அண்ட் கெமிக்கல்ஸ் நிறுவனம் 28 கோடி ரூபாய் லஞ்ச பணத்தை அமைச்சர் வைத்திலிங்கம் மகன் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளதை ஊர்ஜிதம் செய்துள்ளது.
இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை மூடுவதை தடுக்க அமலாக்கத்துறை தன்னிடம் உள்ள ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புகார்தாரராக உள்ள அறப்போர் இயக்கத்தை இதுவரை லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு கூட அழைக்கவில்லை. அமைச்சர் வைத்தியலிங்கம் சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைக்கும் செல்லவில்லை. குற்றப் பத்திரிக்கையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. இந்த அதிமுக ஊழலையும் மூடி மறைக்க திமுக அரசு முயற்சிக்கிறதா? எனவும், தற்பொழுது அமலாக்கத்துறை அனுப்பியுள்ள ஆதாரங்களையும் சேர்த்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமா லஞ்ச ஒழிப்புத்துறை?? என பல்வேறு கேள்விகளை அரசியல் தலைவர்கள் எழுப்பி வருகின்றனர்.