சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் 10 வயது சிறுவன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓமலூர் கருத்தானூர் பகுதியைச் சேர்ந்த சத்யா (33) என்ற பெண், தனது கணவர் பிரிந்து சென்ற நிலையில் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். தான் வேலை பார்க்கும் தனியார் ஷோரூமின் மேலாளரான சக்திவேல் என்பவருடன் சத்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சத்யா அவரிடம் சரியாக பேசாததால், அவர் மீது சந்தேகமடைந்த சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

நேற்று இரவு சத்யாவின் வீட்டிற்குச் சென்ற சக்திவேல், அவர் நீண்ட நேரம் கதவைத் திறக்காததால் கடும் கோபமடைந்தார். வீட்டிற்குள் நுழைந்த அவர், மின் விளக்குகளை அணைத்துவிட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் சத்யாவையும், அவரது 10 வயது மகன் கிஷாந்தையும் சரமாரியாகக் குத்தினார். இதில் சத்யாவின் கை மணிக்கட்டு துண்டானதுடன், சிறுவன் கிஷாந்தின் தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடித்த இருவரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் கிஷாந்த் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படுகாயமடைந்த சத்யா சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தப்பியோடிய கொலையாளி சக்திவேலை போலீஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர் சேலம் கோரிமேடு காட்டுப்பகுதியில் மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. சக்திவேலுக்கும் ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தைகள் உள்ள நிலையில், சத்யாவுடனான பழக்கத்தால் அவரது மனைவி கடந்த 6 மாதமாக அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். ஒரு தவறான உறவினால் சிறுவன் உயிரிழந்ததும், கொலையாளி தற்கொலை செய்ததும், ஒரு பெண் படுகாயமடைந்ததும் ஓமலூர் வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஓமலூர் மற்றும் கருப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version