தமிழக வெற்றி கழகம் அரசு தொடர்வதற்கு ஆதரவு அளிப்பதாக அமமுக எம்எல்ஏ காமராஜ் சட்டபேரவையில் தெரிவித்த நிலையில், அமமுக எம்.எல்.ஏ காமராஜை கட்சியில் இருந்து நீக்கி பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் துவங்கிய நிலையில், தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்பேற்று கொண்டனர். இதனையடுத்து இரண்டாவது நாளான இன்று சபாநாயகர் தேர்வு உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் எம்எல்ஏ தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து பேசியுள்ளது அரசியல் களத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
அதாவது, தமிழக வெற்றி கழகம் அரசு தொடர்வதற்கு ஆதரவு அளிப்பதாக அமமுக எம்எல்ஏ காமராஜ் தெரிவித்துள்ளார். அரசியல் சூழலால் சில கசப்பான விஷயங்கள் நடந்தது. தமிழக இளைஞர்களும், நாங்களும் விஜய்யை நம்புகிறோம். அவர் நல்லாட்சியை தர வேண்டும் என பேசியுள்ளார். மேலும், ஐந்தாண்டுகள் தமிழக வெற்றி கழகம் தலைமையிலான அரசு தொடர ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார் எம்எல்ஏ காமராஜ் .
இந்தநிலையில், கட்சி நிலைப்பாட்டினை மீறி சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தவெகவிற்கு காமராஜ் ஆதரவை தெரிவித்ததால் அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காமராஜின் நடவடிக்கை கட்சியின் குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிரானது என்பதால் அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை பெறுவதற்காக பிற கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவை கோரியது. அந்த வகையில் அமமுக சார்பில் போட்டியிட்டு ஒரேயொரு இடத்தில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. காமராஜ் ஆதரவையும் பெறுவதற்கு தவெக முயற்சி செய்தது. இதனையடுத்து அவர் வழங்கிய ஆதரவு கடிதம் ஒன்றினை ஆளுநரிடம் வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு தவெக கூறியது.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது தரப்பு எம்எல்ஏவின் கையெழுத்தை போலியாக போட்டு ஆளுநரிடம் வழங்கி இருப்பதாக குற்றம்சாட்டினார். அதோடு தவெக குதிரை பேரம் நடத்துவதாக, தனது கட்சி எம்எல்ஏ காமராஜை அருகில் வைத்துக் கொண்டே செய்தியாளர்களிடம் பேசினார் டிடிவி தினகரன். இது அரசியல் களத்தில் மிகப்பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
