தவெக அரசு ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்து இருப்பதாக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று சென்னை தலைமை செயலகத்துக்கு வருகை தந்து நீர்வளத் துறை அமைச்சர் என்.ஆனந்தை நேரில் சந்தித்தார்.
முன்னதாக காரில் வந்திறங்கிய அன்புமணி, அவரது மனைவி சௌமியா அன்புமணி எம்.எல்.ஏ மற்றும் பாமக நிர்வாகிகளை அமைச்சர் என்.ஆனந்த் நேரில் வந்து அலுவலகத்துக்குள் அழைத்து சென்றார்.
பின்னர் சால்வைகளை அணிவித்து மரியாதை செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், இந்த சந்திப்பு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டதுதான் என்றார்.
தமிழகத்தில் உள்ள நீர்த்திட்டங்கள் தொடர்பாக என்னென்ன செய்ய வேண்டும், என்னென்ன தேவை, எது மிக அவசரம் என்பது தொடர்பான திட்டங்களை நாங்கள் வழங்கி இருக்கிறோம். ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்து இருப்பதாகக் குறிப்பிட்டார்.
60 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளை அழைத்து ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்கும் அரசாக தமிழக வெற்றிக்கழகம் உள்ளதாகவும், அதற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும், இதனை ஒருமாற்றமாகத் தான் பார்ப்பதாகவும் கூறினார்.
தலைமைச் செயலகத்தில் தவெக ஆட்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ள அன்புமணி இன்று காலை வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில்,
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடனை தவெக அரசு முழுமையாக தள்ளுபடி செய்யாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் நாகை மாவட்டம் தலைஞாயிறை சேர்ந்த சோமசுந்தரம் என்ற விவசாயி உயிரிழந்ததாகக் கூறியுள்ளார். தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தவாறு சிறு, குறு விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மன உளைச்சலாம் உயிரிழந்த விவசாயி சோமசுந்தரத்தின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
