சென்னை தலைமை செயலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழகத்தின் நீர் மேலாண்மை தொடர்பான ஆலோசனைகளை நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து வழங்கினர்.
இந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, நீர்வளத்துறை செயலாளர், துறையின் அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அன்புமணி ராமதாஸ்:
இன்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தை சந்தித்தோம். அவருடன் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ,முதல்வரின் சிறப்பு ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விதமான நீர் திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மை குறித்து ஆலோசனை கொடுத்தோம். அனுபவங்களை பகிர்ந்து கொண்டோம். இந்த சந்திப்பு ஒரு ஆக்கபூர்வமான சந்திப்பு.
புதிய அரசின் ஒரு வித்தியாசமான அணுகுமுறை, அதிகாரிகளை வைத்து இப்படி ஒரு கூட்டத்தை நடத்திய அரசுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்த கூட்டத்தில் காவேரி – குண்டாறு திட்டம் குறித்து பேசினோம். தென் மாவட்ட மக்களின் 50 ஆண்டு கால கோரிக்கை இது.
2008 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் 3% மட்டுமே இந்த திட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரியலூர் சோழர் பாசன திட்டம் குறித்தும் பேசினோம். சோழர் காலத்தில் மிக செழுமையான மாவட்டமாக இருந்த அரியலூர் தற்போது வறட்சியாக இருக்கிறது.
விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் நந்தன் கால்வாய் திட்டம் குறித்து பேசினோம். அன்புமணிக்கு 3 வயது இருக்கும் போது அறிவித்தார்கள். தற்போது 57 வயதாகிறது. இப்போதும் செயல்படுத்தவில்லை.
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் 2.0 செயல்படுத்துவது குறித்தும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் பேசினோம் என தெரிவித்தார்.
கடந்த 60 ஆண்டுகாலம் இந்த திராவிட கட்சிகளின் மிகப் பெரிய தோல்வி, நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்காமல் இருந்ததுதான் என்றவர்,
தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு கடந்த 45 ஆண்டுகளில் 40 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு அடுத்த 10 ஆண்டுகளில் நீர் திட்டங்களுக்கு ₹1 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டும். தனியாக இதற்காக கடன் வாங்கி ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தினால் மட்டுமே தமிழ்நாடு வளம் பெறும்.
இந்தியாவில் அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. ஆனால் இது அரசின் தோல்வி. ஜூன் மாதம் கொடுக்க வேண்டிய காவிரி நீரை கொடுக்கவில்லை. ஜூலை மாதமும் கொடுக்கப் போவது இல்லை. எல் நினோ பிரச்சனை தொடர்பாக வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக முதல்வர் தனி கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த கோரிக்கை விடுத்த அன்புமணி, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து சென்று அழுத்தம் தர வேண்டும் என கோரிக்கை வைத்ததாகக் கூறினார்.
மேகதாது நடுவர் மன்றம் குறித்து விளக்கம் அளித்தனர்.ஆனால் அது ஏற்புடையதாக இல்லை எனக் கூறியவர், பாரபட்சம் இல்லாமல் சிறு, குறு விவசாயிகளின் அனைத்து கடனையும் அரசு ரத்து செய்ய வேண்டும். விவசாயிகள் இன்னும் மோசமான சூழலுக்கு இந்த ஆண்டு தள்ளப்படுவார்கள். எனவே அனைத்து கூட்டுறவு கடனையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தார்.
அமைச்சர்களுடனான சந்திப்பு தவெக அரசுடனான கூட்டணிக்கான அச்சாரமா? என்ற கேள்விக்கு “இதை ஆக்கபூர்வமான அரசியலாக பாருங்கள். எங்களிடம் அனுபவம் உள்ளது. தமிழ்நாட்டின் நலனுக்காக ஆலோசனைகளை வழங்கியுள்ளோம் என்றார்.
