திருத்தணி அருகே பள்ளியில் சுவர் இடிந்து பலியான மாணவன் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லை என்று தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து, 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தங்கள் குழந்தையை இழந்து தவிக்கும் சிறுவனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. கடந்த நான்கரை ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், அரசுப் பள்ளிக் கட்டிடங்கள், மேற்கூரைகள், சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுவது தொடர்கதை ஆகியிருக்கிறது.

ஒவ்வொரு முறையும், அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மையைப் பரிசோதித்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்தி வந்திருக்கிறோம். பல பள்ளிகள், கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் இயங்கி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆனால், முதலமைச்சரோ, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ, இதனைக் குறித்து எந்தக் அக்கறையும் காட்டவில்லை.

ஏழை, எளிய குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளை, திமுக அரசு ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததன் விளைவு, இன்று வாழ வேண்டிய ஒரு குழந்தையைப் பறிகொடுத்திருக்கிறோம். இதனை விபத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலையாகவே கருத முடியும்.

வெறும் விளம்பர நாடகங்களை மட்டுமே, கடந்த நான்கரை ஆண்டுகளாக நடத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  ஆகிய இருவருமே இதற்கு முழுப் பொறுப்பு. இனியும், அரசுப் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யாமலிருப்பது வெட்கக்கேடு.

இவ்வாறு அந்தப் பதிவில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version