சென்னை போரூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்த சின்னத்திரை நடிகை சுபாஷினி (36), குடும்பத் தகராறு காரணமாகத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பெங்களூரில் தனது கணவர் பிப்பின் என்பவருடன் வசித்து வந்தார். சமீபகாலமாக படப்பிடிப்புப் பணிகளுக்காகச் சென்னை வந்திருந்த அவர், போரூரில் உள்ள குடியிருப்பில் தங்கியிருந்து பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்தார்.

சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான இவர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கயல்’ உள்ளிட்ட சீரியல்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்ததோடு, சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முத்திரை பதித்துள்ளார். நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் மூலம் பேசிக்கொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்தத் திடீர் மோதலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சுபாஷினி, சில நிமிடங்களிலேயே விபரீத முடிவை எடுத்துத் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகை சுபாஷிணி தற்கொலை செய்து கொள்வதை வீடியோ காலில் பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் பிபின் உடனே அடுக்குமாடி காவலாளிக்கு தகவல் தெரிவித்தன் பேரில் காவலாளி உடனே இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போரூர் போலீசார், சுபாஷினியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடிகைகளின் தொடர் தற்கொலைச் சம்பவங்கள் சமீபகாலமாகக் கலைத்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தச் சம்பவம் குறித்தும், தற்கொலைக்கான பின்னணி குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்பப் பிரச்சனையா அல்லது வேறு ஏதேனும் அழுத்தங்கள் காரணமா என்பது குறித்தும் கணவரிடம் விசாரணை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version