தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி விஜய்யின் தவெக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு வருகிற 6ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதன்படி, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விருப்பமனு விநியோகம் செய்து வருகின்றனர். இதேபோல், மற்ற கட்சிகளும் கூட்டணி, பிரச்சாரம், பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி வருகின்றன.

அதன் ஒருபகுதியாக, அரசியலில் நுழைந்துள்ள விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் 243 தொகுதிகளிலும் தவெக தனித்து களமிறங்கவுள்ளதாக கூறிவருகிறார். இந்தநிலையில், தவெக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களுக்கு வருகிற 6ஆம் தேதி முதல் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://x.com/TVKPartyHQ/status/2018577404013523448

இதுதொடர்பாக தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையாகத் திகழும் தமிழக வெற்றிக் கழகம், அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான நல்லாட்சியை வழங்கும் நோக்கில் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தீவிரமாகக் களமாடி வருகிறது. இந்தக் களத்தில் தேர்தல் அரசியல் என்பது, மிகவும் அத்தியாவசியமான ஒன்று. ஆட்சி அதிகாரம் நம் கையில் இருந்தால் மட்டுமே தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை முழுவதுமாக நிறைவேற்ற முடியும். தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும்.

அந்த வகையில், வருகின்ற சட்டமன்றத் தேர்தலை நாம் எழுச்சியுடன் சந்திக்கின்றோம். தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நம் வெற்றித் தலைவர் அவர்களின் ஆசி பெற்ற வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள் தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், வரும் 06.02.2026 வெள்ளிக்கிழமை முதல் 14.02.2026 சனிக்கிழமை வரை கழகத் தலைமை நிலையச் செயலகத்தில் வழங்கப்படுகின்றன.

பிப்ரவரி 6ஆம் தேதி அன்று நண்பகல் 12 மணி முதல், விருப்ப மனுக்களைப் பெறலாம். இதர நாள்களில் காலை 10.00 மணி முதல், மாலை 06.00 மணி வரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர்கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் ஒப்படைக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், வெற்றித் தலைவர் அவர்களின் ஆணைக்கிணங்க, தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது,

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version