அத்திக்கடவு வனப்பகுதியில் பழங்குடியின இளைஞர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மான் என நினைத்து மதுபோதையில் இளைஞரை சுட்டு விட்டதாக கைது செய்யப்பட்ட உறவினர்கள் பரபரப்பு வாக்குமூலம். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் மோட்டார் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அன்சூர்,குண்டூர்,அத்திக்கடவு,சொரண்டி,மானாறு,பில்லூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளன.இங்கு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அத்திக்கடவு பகுதியில் இரு தினங்களுக்கு முன்பு சொரண்டி பகுதியை சேர்ந்த சஞ்ஜித்(23), அன்சூர் பகுதியை சேர்ந்த தாய்மாமா முருகேசன்(37),அன்சூர் பகுதியை சேர்ந்த தாத்தா பாப்பையன்(50) உள்ளிட்ட இருவருடன் சேர்ந்து முயல் வேட்டைக்கு சென்றுள்ளனர். மூவரும் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் இளைஞர் சஞ்ஜித் நேற்று முன்தினம் காலை துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் அவரது உடலை உறவினர்கள் கிராமத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான்,காரமடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும்,கோவையிலிருந்து தடய அறிவியல் துறையினரும் வந்திருந்து தடயங்களை சேகரித்து சென்றனர்.இதனையடுத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்ட சஞ்ஜித்தின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்,இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து உடன் சென்ற உறவினர்களான பாப்பையா,முருகேசன் உள்ளிட்டோரை 4 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். இதனிடையே நேற்று காலை இருவரும் வெள்ளியங்காடு தனியார் பேக்கரி அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.
விரைந்து சென்ற போலீசார் இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும்,இச்சம்பவத்தில் பயன்படுத்திய துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு இருவரையும் அழைத்துச்சென்று துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.தொடர்ந்து இருவரையும் காரமடை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரிடம் அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் சஞ்ஜித், தாய்மாமா முருகேசன்@பிரவீன், தாத்தா பாப்பையா@காளிச்சாமி மூவரும் ஆற்றில் மீன் பிடிக்க செல்வதாக வீட்டில் கூறி விட்டு வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு துப்பாக்கி மற்றும் கரி மருந்தை எடுத்துக்கொண்டு அத்திக்கடவு அருகே வனப்பகுதியில் மான் வேட்டைக்கு சென்றோம்.அப்போது,மூவரும் மது அருந்தி இருந்தோம்.வனப்பகுதியில் சஞ்ஜித் மான் வருவதை நோட்டமிட்டு சப்தமிடவே பாப்பையன் துப்பாக்கியால் சுட்டார்.அப்போது,முன்னால் நின்றிருந்த சஞ்ஜித்தின் இடது மார்பின் கீழே துப்பாக்கி குண்டுகள் தவறுதலாக பட்டு விட்டது.இதில் சஞ்ஜித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனால் பயத்தில் வனப்பகுதியிலேயே சடலத்தை விட்டுவிட்டு சத்தமில்லாமல் அங்கிருந்து சஞ்ஜித்தின் வீட்டிற்கு வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் பைக்கை எடுத்துக்கொண்டு தப்பி சென்றோம்.வெள்ளியங்காட்டில் பதுங்கியிருந்த போது போலீசில் மாட்டிக்கொண்டோம் என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த காரமடை போலீசார் அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் தப்பி ஓட பயன்படுத்திய மோட்டார் பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர்,அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
