மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறு- தேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் மே 4ம் தேதி நடத்தப்பட்டது.

ஆவடியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுதினர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் 2.45 மணிக்கு துவங்கிய கனமழை காரணமாக 3 மணியில் இருந்து 4.15 மணி வரை மின் தடை ஏற்பட்டதால் தேர்வை முழுமையாக எழுத முடியவில்லை எனக் கூறி, மறு தேர்வு நடத்த உத்தரவிடக் கோரி, திருவள்ளூரை சேர்ந்த சாய் ப்ரியா, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன் மற்றும் ராணிப்பேட்டையை சேர்ந்த அக்‌ஷயா உள்ளிட்ட 13 மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், மின் தடை காரணமாக குறைவான வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், தேர்வு மையத்திற்குள் மழைநீர் புகுந்ததால், மாற்று இடத்தில் இருந்து தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டதால் சிரமத்துக்கு உள்ளானதாகவும் கூறியுள்ளனர்.

கவன சிதறல்கள் காரணமாக திறமையாக தேர்வு எழுத முடியாத நிலையில், கூடுதல் நேரமும் ஒதுக்கப்படவில்லை எனவும், முழுமையாக தேர்வு எழுத முடியாததால், தேசிய தேர்வு முகமைக்கு புகார் அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் கூறியுள்ளனர்.

பலருடைய கனவாக மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வில் சிறு குறைபாடும் மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்துவிடும் என்பதால், மறு-தேர்வு நடத்த வேண்டும் எனவும், இந்த வழக்கு முடியும் வரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு, நீதிபதி வி. லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல் சுந்தரேசன், மின் தடை ஏற்பட்டதா? என்பது குறித்தும், அவ்வாறு மின்தடை ஏற்பட்டிருந்தால் மாணவர்களின் கோரிக்கை பரிசீலிப்பது குறித்து பதிலளிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என கோரினார்.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய அரசு, தேசிய மருத்துவ ஆணையம், தேசிய தேர்வு முகமை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, அதுவரை நீட் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என தடை விதித்து விசாரணையை ஜூன் 2ம் தேதி தள்ளிவைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version