தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், சக பாஜக தலைவர்களுடன் நின்றுக்கொண்டிருக்கும் தன்னை பார்த்தால் அப்படியா தோன்றுகிறது என்று அண்ணாமலை பதிலளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கமலஹாசன் நல்ல நடிகர் அதில் மாற்றுக் கருத்து இல்லை. நிதியமைச்சர், இன்னொருவர் பேசியதை குறிப்பிட்டு அவர் சொல்லவந்ததை கமலஹாசன் தவறாக புரிந்து கொண்டார். அவர் ராஜ்யசபா உறுப்பினராக இருப்பதால் அவர் மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை. அடுத்த முறை பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது திருத்தத்தை பதிவு செய்வார் என நம்புகிறேன்.
விஜய் அவரது கட்சி, அவரது கொள்கையை மக்கள் முன்னால் வைக்கட்டும். நாங்கள் ஜனநாயக கூட்டணி கொள்கையை வைக்கிறோம் மக்கள் முடிவு செய்யட்டும்.
ஓபிஎஸ் தனித்து விடப்படவில்லை. தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளது. ஓபிஎஸ் எங்களுடன் தான் உள்ளார் கவலைப்பட வேண்டாம்.
கல்வி கூடங்களில் கஞ்சா விற்கும் நிலைமையை திமுக ஆட்சி கொண்டு வந்துள்ளது. கல்வியில் சிறந்த மாநிலம் என்று தமிழ்நாடை எப்படி சொல்வது. தென்னிந்தியாவில் கல்வி கற்பதில் தமிழ்நாடு அதல பாதாளத்தில் உள்ளது என்று விமர்சித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்கள், “பாஜகவைவிட்டு வெளியேறி, தனி கட்சி ஆரம்பிக்க போகிறீர்களாமே” என்ற கேள்விக்கு “என்னை பார்த்தால் அப்படி தெரிகிறதா?” என பதில் கேள்வி எழுப்பினார்.
