ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் தேர்வு நிலை பேரூராட்சியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தின் மேற்கூரை மற்றும் தடுப்புச் சுவர், நள்ளிரவில் வீசிய சூறைக்காற்று மற்றும் மழையின் போது இடிந்து விழுந்து பெரும் சேதமடைந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பொதுமக்களுக்கு எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை.

நவீனமயமாக்கல் மூலதன திட்டத்தின் கீழ், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்போதைய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் காணொலி காட்சி மூலமாக இந்த பேருந்து நிலையம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையில், இன்று காவேரிப்பாக்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென இடி, மின்னல் மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது, பலத்த காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் பேருந்து நிலையத்தின் மேலே அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவர் மற்றும் மேற்கூரையின் பெரும் பகுதி உடைந்து கீழே விழுந்து நொறுங்கியது.

கட்டப்பட்டு சில ஆண்டுகளேயான ஒரு புதிய பேருந்து நிலையத்தின் தரைத்தள மேற்கூரை, ஒரு சாதாரண சூறைக்காற்றுக்கே ஒட்டுமொத்தமாக இடிந்து விழுந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேருந்து நிலையம் ஆரம்பம் முதலே மிகவும் தரமற்ற முறையில், மோசமான கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டிருப்பதைத்தான் இந்தச் சம்பவம் உறுதி செய்கிறது எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

விபத்து நடந்த சமயத்தில் பேருந்து நிலையப் பகுதியில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தரமற்ற முறையில் பேருந்து நிலையத்தைக் கட்டிய ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதைச் சரியாகக் கண்காணிக்கத் தவறிய அதிகாரிகள் மீது அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version