திருவண்ணாமலையில் 554ஏக்கர் பரப்பை பாதுகாக்கப்பட வன பகுதியாக அறிவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான கண்காணிப்பு குழு, சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள தாமரைக்கேணி உள்ளிட்ட நீர்நிலைகளையும், மலையில் உள்ள ஓடைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுப்பதற்காக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கண்காணிப்புக் குழுவை நியமித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கண்காணிப்பு குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஆக்கரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக ஆக்கரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், ஆறு மாதங்களாக நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருவண்ணாமலையில் 554ஏக்கர் பரப்பை பாதுகாக்கப்பட வனப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என வனத்துறைக்கு, மாவட்ட நிர்வாகம் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

554 ஏக்கர் பரப்பை விரைந்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும், ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர், மின் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட வேண்டும் எனவும் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக வழக்கின் விசாரணையை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version