கரூரில் லாரி மீது கார் மோதி விபத்த்தில், கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சார்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் அவரது 8 மாத கர்ப்பிணி மனைவி ஜனனி ஆகியோர் தங்களது 3 வயது பெண் குழந்தையுடன் பெங்களூரில் இருந்து காரில் சொந்த ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர்.
கரூர் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஈசநத்தம் பிரிவு ரோடு அருகே பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஒன்று திடீரென சாலையைக் கடந்துள்ளது.
இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க, கார் ஓட்டுநர், இடதுபுறமாக காரைத் திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் காரின் முன் பகுதி லாரியின் அடியில் சிக்கியது. இதில் காரில் பயணித்த அரவிந்த், அவரது கர்ப்பிணி மனைவி ஜனனி மற்றும் காரின் ஓட்டுநர் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
3 வயது பெண் குழந்தை துவிதா மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த பாண்டித்துரை ஆகிய இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்துத் தகவலறிந்த அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
