லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் அவருக்கு தொடர்புடைய நிறுவனங்களின் ரூ.457 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
கடந்த 2009-2010ஆம் ஆண்டுகளில் சிக்கிம் மாநில லாட்டரிகளை விதிமுறைகளை மீறி விற்பனை செய்ததன் மூலம், சிக்கிம் அரசுக்கு சுமார் ரூ.910 கோடி இழப்பு ஏற்பட்டதாக குற்றம்சாட்டி, லாட்டரி அதிபர் மார்ட்டின் உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தற்போது கேரள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சிபிஐ வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்து, மார்ட்டின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. அதன் பின்னர், அவருக்கு தொடர்புடையதாகக் கூறப்படும் ரூ.457 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன.
அமலாக்கத் துறையின் இந்த நடவடிக்கையை, பின்னர் அமலாக்கத் துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் உறுதி செய்தது. இதையடுத்து, சொத்து முடக்க உத்தரவை ரத்து செய்யவும், முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கவும் கோரி மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. வழக்கின் தன்மை மற்றும் மனுதாரர்கள் முன்வைத்த வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், மனுக்களுக்கு ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர்.
மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பின்னர் நடைபெறும் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
