மிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தென் கொரியாவுக்கு சென்று, அந்நாட்டின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹெச்.டி. ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HD Hyundai Heavy Industries) அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளார். தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் அமைக்கும் திட்டத்தை விரைவுபடுத்துவது தொடர்பாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தென் கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, உலகின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.டி. ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் (HD Hyundai Heavy Industries) நிறுவனத்தின் உல்சான் கப்பல் கட்டும் தளத்தை பார்வையிட்டார். அப்போது கப்பல் கட்டுமானம், உற்பத்தி மேலாண்மை மற்றும் கடல்சார் தொழில்நுட்ப வசதிகள் குறித்து ஆய்வு செய்ததுடன், நிறுவன அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையும் நடத்தினார்.

தூத்துக்குடியில் உலகத் தரம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கான திட்டமே இந்த சந்திப்பின் முக்கிய அம்சமாக இருந்தது. கடந்த ஆண்டு தமிழக அரசுக்கும் ஹூண்டாய் நிறுவனத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அதன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இருதரப்பினரும் ஆலோசனை நடத்தினர்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 2.5 மில்லியன் மொத்த டன் (GT) கொள்ளளவு கொண்ட பிரம்மாண்ட கப்பல் கட்டும் வளாகம் உருவாக்கப்பட உள்ளது. நில ஒதுக்கீடு, துறைமுக மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள், வரிச் சலுகைகள், நிதி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு ஏற்கனவே ஆட்டோமொபைல், மின்னணுவியல் மற்றும் கனரக தொழில்துறைகளின் முக்கிய உற்பத்தி மையமாக திகழும் நிலையில், கப்பல் கட்டும் மற்றும் கடல்சார் தொழில்துறையையும் அடுத்த கட்ட வளர்ச்சி துறையாக மாற்ற அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அமைச்சர் கீர்த்தனா பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணமாக இந்த தென் கொரியா பயணம் அமைந்துள்ளது. தூத்துக்குடி கப்பல் கட்டும் திட்டத்தை விரைவுபடுத்தி புதிய முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த பயணம், தமிழ்நாட்டை இந்தியாவின் முக்கிய கடல்சார் மற்றும் கப்பல் கட்டும் மையமாக உருவாக்கும் அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துவதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version