தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சில்லாங்குளம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான முருகனின் மனைவி சுமதி (47), உடல்நலம் குன்றிய தனது வளர்ப்பு நாய்க்குட்டியை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றபோது, அவரது தோள்பட்டையில் நாய்க்குட்டியின் நகம் பட்டுச் சிறிய கீறல் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட நாய் என்பதால் அலட்சியமாக இருந்த சுமதிக்கு, சில நாட்களில் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ‘ரேபிஸ்’ (Rabies) தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளனர்.

தொற்று முற்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்ட சுமதி, வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

செல்லப் பிராணிகள் கடித்தால் மட்டுமல்ல, சிறிய கீறல் ஏற்பட்டாலும் கூட அலட்சியம் காட்டாமல் உடனடியாக மருத்துவரை அணுகித் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்பதையும், முறையான விழிப்புணர்வு இல்லாவிட்டால் ஒரு சிறு காயம் கூட உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதையும் இச்சம்பவம் வேதனையுடன் உணர்த்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version