தமிழ்நாட்டில் அரியலூர்,பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் அதிகமாக பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பாக உலக எய்ஸ்ட் தினம் – 2025 ஒட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஒர் ஆண்டுக்காலங்களில் சிறந்த எச்.ஐ.வி பரிசோதனை மையம் மற்றும் எச்.ஐ.வி குறித்தான விழப்புணர்வை ஏற்படுத்தும் NGO களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பின்னர் எச்.ஐ.வி விழிப்புணர்வு குறித்தான உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் எச்.ஐ.வி.குறித்தான விழிப்புணர்வு காணொளி காட்சிப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்த்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் மருத்துவ கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்ரமணியன், மக்களிடையே ஆண்டுதோறும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. 2030க்குள் எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத எச்ஐவி பாதிப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும் என்ற வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருகிறது. எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தொற்றை கட்டுப்படுத்துவதை முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு தனி கவனம் செலுத்தப்பட்டு புதிய எச்ஐவி தொற்றை தடுக்கும் வகையில் மாநில அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து எச்ஐவி தடுப்பு பணியினை திறன் பட செய்து வருகிறார்கள் என தெரிவித்தார்.
இந்தியாவின் எச்ஐவி பாதிப்பு என்பது 0.26 சதவீதமாக இருந்து வருகிற நிலையில், தமிழ்நாட்டில் எச்ஐவி பாதிப்பு என்பது 0.16 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் தான் இந்தியாவில் இருக்கின்ற அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக 100% கருவுற்ற தாய்மார்களுக்கு ஹச்ஐவி மற்றும் சிபிலிஸ் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் கருவுற்ற தாய்மார்கள் இடமிருந்து குழந்தைகளுக்கு தொற்றுப் பரவாமல் தடுக்கப்பட்டு வருகிறது.
எச்.ஐ.வி தொற்றை கண்டறிய 2600 மையங்கள் உள்ளது. 172 இணை கூற்று மருத்துவ சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி அதிகமான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே ஹெச்.பி.வி என்கின்ற தடுப்பூசி திட்டத்தை இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதல் முறையாக இலவசமாக கொடுக்கிறோம் என கூறினார். இந்தத் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளது எனவும் 9 முதல் 14 வயது உட்பட்ட சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளோம் எனவும் தெரிவித்தார். இதன்மூலம், 3,38,000 குழந்தைகள் இத்திட்டத்தில் பயன்பெற உள்ளார்கள் எனவும் முதலில் இந்த நான்கு மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளோம் என்றும் தெரிவித்தார்.
