திருடுப்போன நகைகளைக் காவல்துறையினர் கண்டுபிடிக்கத் தவறினால், பாதிக்கப்பட்ட நபருக்கு தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தனது வீட்டில் திருடுபோன 75 பவுன் நகையைப் பல ஆண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி, மதுரையைச் சேர்ந்த சுஜா சங்கரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் இந்த வழக்கின் விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்றி, திருடுபோன நகையை கண்டுபிடித்துத் தர உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நகை திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் காவல்துறையினர் வழக்கை முடித்துவைக்கும் நாளிலிருந்து 12 வாரங்களுக்குள் பாதிக்கப்பட்ட நபருக்குத் தமிழ்நாடு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
திருடுபோன நகையின் மொத்த மதிப்பில் 30 சதவீதம் தொகையைத் தமிழக அரசு புகார்தாரருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளை, துரிதமாகவும், திறமையாகவும் புலன் விசாரணை செய்து கண்டுபிடிப்பதற்காக, மாவட்டந்தோறும் காவல்துறையில் சிறப்புப் பிரிவை (Special Investigation Team – SIT) உருவாக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புலன் விசாரணை நடத்தி, கண்டுபிடிக்க முடியாத திருட்டு வழக்குகளைத் தீர்ப்பதற்காக, திறமை மிக்க காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட ஒரு சிறப்பு காவல் பிரிவை (SIT) மாவட்டம் தோறும் காவல்துறையில் உருவாக்க வேண்டும் என்றும் விசாரணை அதிகாரிகளின் திறனை மேம்படுத்தவும், புகார்தாரர்களுடன் தகவல் பரிமாற்றத்தை உறுதிப்படுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
விசாரணை அதிகாரிகளுக்குச் சிறப்புத் தொழில்நுட்பப் புத்துணர்வுப் பயிற்சி குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்பட வேண்டும் என்றும் இந்த பயிற்சியில், புலன் விசாரணையின் நவீன உத்திகள் மற்றும் புகார்தாரருக்கும், அரசுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தை ஆன்லைன் மூலம் நவீன முறையில் கையாள்வது எப்படி என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வலியுறுத்தியுள்ளது.
