முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 7-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து ஓமந்தூரார் மருத்துவமனை வளாகத்தில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, கட்சிப் பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அத்தோடு பேரணியில் கலந்து கொண்டவர்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
