தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், முதன்முறையாக அரசு முறைப் பயணமாக டெல்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மே 22-ஆம் தேதி அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேச உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி தற்போது 5 நாடுகளுக்கான தனது அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர் மே 21-ஆம் தேதி டெல்லி திரும்புகிறார். அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளான மே 22-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் விஜய் – பிரதமர் மோடி இடையேயான சந்திப்புக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடியை விஜய் நேரில் சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்த டெல்லி பயணத்தின் போது, பிரதமர் மோடியை மட்டுமின்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்களையும் முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து அவர் ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.
மேலும், டெல்லியில் தங்கியிருக்கும் காலத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் ஆகியோரையும் முதலமைச்சர் விஜய் மரியாதை நிமித்தமாகச் சந்திக்க வாய்ப்புள்ளதாகத் தவெக தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தவெக ஆட்சியைத் தக்கவைத்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய்யின் இந்த முதல் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
