ஒரு கட்சிக்கும், மற்றொரு கட்சிக்கும் இடையே கொள்கை ரீதியாக மாற்றுக் கருத்துகள் இருக்கலாம். ஒரு தலைவர் மற்றொரு அரசியல் தலைவரை பொதுவெளியில் விமர்சிப்பதை தொடர்ந்து நாம் பார்த்து வருகிறோம். ஆனால் நேரில் ஒருவரை ஒருவர்பார்த்துக் கொள்ளும் போது ஒன்றுமே நடக்காதது போல், ஒருவரை ஒருவர் வரவேற்று நலம் விசாரித்துக் கொள்வர்.

அரசியலில் இதெல்லாம் சாதாரணம் என மக்களும் கடந்து சென்று விடுவர். சில இடங்களில் அதிகாரத்தில் மேலிடத்திலிருப்பவர்கள், கீழே பணியாற்றுபவர்களை வெறுப்பதும் உண்டு. அப்படி தற்போது மேயர் பிரியாவுக்கும், தவெக எம்.எல்.ஏ பல்லவிக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் மேயரான திமுகவை சேர்ந்த பிரியா, திமுக ஆட்சியில் இருந்தப் போது பரபரப்பாக வேலை பார்த்து வந்தார். ஆனால் தற்போது தவெக ஆட்சி அமைத்துள்ள நிலையில், அவரது பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் குறைந்துள்ளது.

இன்று காலையில் திரு.வி.க.நகர் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பில் உள்ள உருது பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் மேயர் பிரியா, கல்வி நிலைக்குழு தலைவர் பாலவாக்கம் விஸ்வநாதன், இணை ஆணையர் கற்பகம், ஆகியோர் கலந்து கொண்டனர். அதேப் போல,

ஆர்.கே.நகர் தொகுதி தவெக எம்.எல்.ஏ பல்லவியும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது புதிய கட்டடத்தில் இரண்டு ரிப்பன்கள் கட்டப்பட்டு, ஒரு கத்ரிக்கோல் மேயரிடமும், மற்றொன்று எம்.எல்.ஏவிடமும் கொடுக்கப்பட்டது. ஆனால் மேயர் பிரியா திடீரென இரண்டு ரிப்பனையும் தானே வெட்டி கட்டடத்தை திறந்து வைத்தார்.

இதனை எதிர்பாராத எம்.எல்.ஏ பல்லவியின் முகம் அப்போது சற்று சுருங்கி விட்டது. தொடர்ந்து புதிய கட்டடத்தில் குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது முதல் திரியை மெழுகுவர்த்தியால் ஏற்றிய மேயர் பிரியா, அடுத்ததாக பக்கத்தில் நின்ற எம்.எல்.ஏவிடம் மெழுகுவர்த்தையை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எம்.எல்.ஏ பல்லவியும், மெழுகுவர்த்தையை வாங்க கையை நீட்ட, அவரிடம் அதனை கொடுக்க மறுத்து, அருகேயிருந்த இணை ஆணையர் கற்பகத்திடம் மெழுகு வர்த்தியை கொடுத்தார். இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற எம்.எல்.ஏ பல்லவி, நிகழ்ச்சியிலிருந்து விறுவிறுவென வெளியேறினார்.

உடனே நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எம்.எல்.ஏ பல்லவியை சமாதானப்படுத்தி, சின்னபாபு தெருவில் கட்டப்பட்ட ஆரம்ப பள்ளித் திறப்பு விழாவிற்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கும் வந்திருந்த மேயர் பிரியா, வழக்கம் போல, ரிப்பனை வெட்டிவிட்டு, குத்துவிளக்கு ஏற்றினார். தொடர்ந்து மெழுகுவர்த்தியை எம்.எல்.ஏ பல்லவியிடம் கொடுக்க, அவரோ நீங்களே ஏற்றி விடுங்கள் என்று கூறி மெழுகு வர்த்தியை வாங்க மறுத்துவிட்டார்.

இப்படி இரு நிகழ்ச்சிகளில், அடுத்தடுத்து 2 பெண் தலைவர்களுக்குள் நடந்த அதிகார மோதல் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்தது. கட்சி ரீதியாக இருவரும் வெவ்வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட, ஒரு பொது நிகழ்ச்சியில் எப்படி இப்படி நடந்து கொள்ளலாம் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version