கோவை, செல்வபுரம் கல்லாமேடு பகுதியில் அமைந்து உள்ள இந்துக்கள் மயானம், கோவை மாநகராட்சியின் பராமரிப்பில் செயல்பட்டு வருகிறது. 15 க்கும் மேற்பட்ட தேவேந்திரகுல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இடத்தை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மயானத்தில் கர்ம காரியங்களுக்கு மண்டபமும், தகன மேடையும் உள்ளன.
ஆனால், சமீப காலமாக இந்த மயானம் சரியான பராமரிப்பின்றி உள்ளது. இதனால், அந்த இடம் சமூக விரோதிகள் தங்கும் கூடாரமாக மாறி உள்ளது என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.
இதனை அடுத்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு, இருவர் போதைப் பொருட்களுடன் இப்பகுதியில் கைது செய்யப்பட்ட சம்பவமும் இதை உறுதி செய்கிறது. மேலும், மயானத்திற்குப் பக்கத்தில் உள்ள தனியார் நபர் ஒருவர் தனது நிலத்தை மனைகளாக விற்க முயற்சித்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, மயானத்தின் சுற்றுச்சுவரை இடித்து, முன்னோர்களுக்கு அமைத்து இருந்த மூன்று ஜீவ சமாதிகளை இடித்து, மேலும் அங்கு இருந்த சமாதிகளை இடித்து, அந்த இடத்தில் கற்கள் நட்டு வைத்து இருப்பதாகவும், சந்தன மரங்கள் இரவோடு, இரவு கடத்தப்பட்டதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன. மொத்தம் 15 க்கும் மேற்பட்ட சந்தன மரங்கள் இங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை காவல் துறையும் மாநகராட்சியும் விசாரணை செய்ய வேண்டுமென மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஜீவ சமாதிகள் உட்பட சமாதிகளை இடித்தது மிகவும் வேதனையான செயலாக இருப்பதாகவும், இந்த செயல்களுக்கு உள்ளூரில் உள்ள தி.மு.க கவுன்சிலரின் துணை இல்லாமல் நடக்க முடியாது எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆண்டுதோறும் ஆடி அமாவாசை நாளில் மக்கள் இங்கு வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். பித்ருக்கள், கன்னிமார்களுக்கு பூஜை நடத்தும் இவ்விடம் இப்போது பெரும் அழிவுக்கு உள்ளாகி உள்ளது. இத்தனை பரபரப்புக்கு இடையே, மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து, மயான சுற்றுச்சுவர் இடித்தவர்கள், சந்தன மரங்களை வெட்டி கடத்தியவர்கள், சமாதிகளை இடித்தவர்கள் ஆகியோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவையில் இரவோடு இரவாக இந்துக்கள் மயானத்தில் ஜீவ சமாதிகளை இடித்து, அங்கு இருந்த சந்தன மரங்களை வெட்டி கடத்தியதை அங்கு வழிபாடு நடத்தும் பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
