கோவை அருகே சூலூர் பகுதியில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரி சிறுமியின் உறவினர்கள் விடிய விடிய நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

சூலூர் கண்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். இதுகுறித்து போலீசார் தேடி வந்த நிலையில், கண்ணம்பாளையம் குளத்தின் அருகே அந்தச் சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சிறுமி இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு, கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது.

இக்கொடூர சம்பவம் தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை அடையாளம் கண்டனர். இதையடுத்து, பள்ளப்பாளையத்தைச் சேர்ந்த கார்த்தி, அவரது நண்பர் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மோகன் ராஜ் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் குற்றவாளிகள் என உறுதியானது. மேலும் அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.

இதையடுத்து, கைதான கார்த்தி, போலீசாரிடம் இருந்து தப்பியோட முயன்றபோது அவருக்குக் கை மற்றும் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்கும் வகையிலும், குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் சமரசப் பேச்சுவார்த்தையை ஏற்க மறுத்த அவர்கள், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும் வரை சிறுமியின் உடலை வாங்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகக் கூறி போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version