மத்தியபிரதேசத்தில் கோல்ட்ரிஃப் இருமல் மருந்து குடித்து குழந்தைகள் பலியான விவகாரத்தில் 2 அல்லது 3 நாட்களில் மருந்து தயாரிப்பு நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் இருபுறமும் பேருந்து நிறுத்தத்தை அகற்றி புதிய இழுவிசை கூரையிலான பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கும் பணியினை இன்று காலை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்ரமணியன் பேசுகையில், “கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் நச்சுத்தன்மை கலப்பு அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 1ஆம் தேதி இருமல் மருந்து குடித்த குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசு தமிழகத்துக்கு இது குறித்து தகவல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு நச்சுத்தன்மை மற்றும் கலப்பு இருப்பது சோதனை செய்யப்பட்டு கண்டறிந்து மத்திய பிரதேச அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் புதுச்சேரி மற்றும் கர்நாடக அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மத்திய அரசும், மத்திய பிரதேசும் இந்த மருந்தில் தப்பு இல்லை என விட்டுவிட்டார்கள். ஆனால் நாம் தான் இதனை உறுதி செய்து 3ஆம் தேதியில் இருந்து இந்த மருந்து உற்பத்திக்கு தடை விதித்தோம். க்ளோசர் ஆர்டரும் கொடுத்துவிட்டோம். கடந்த ஏழாம் தேதி அதனுடைய உரிமையாளருக்கு கிரிமினல் நடவடிக்கை நோட்டீஸ் வழங்க எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் ஆளில்லாத காரணத்தால் நோட்டீஸ் ஒட்டப்பட்டு நேற்று அவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் உரிமையாளரை அழைத்து நிறுவனத்திற்கு சென்று விசாரணை நடத்தி நச்சுத்தன்மை குறித்து அடுத்த கட்ட நகர்வாக நிரந்தரமாக மூடப்படும். அந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூடுவதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களில் முடிவெடுப்போம். கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனியர் மருந்து ஆய்வாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.