சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அத்தனை கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தொடங்குவதில் தீவிரமாக இருக்கின்றனர். அதேபோல் தங்களுக்கு சாதகமான தொகுதிகளையும் அடையாளம் கண்டு பட்டியலுடன் காத்திருக்கின்றனர்.
அந்தவகையில், திருச்சியில் கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் இடையில் மறைமுக மோதல் இருந்து வருகிறது. திருச்சியில் தனது ஆதரவாளர்களை அதிகளவில் கொண்டு வர வேண்டும் என்பதில் இருவருமே தீவிரமாக இருக்கின்றனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அமைச்சர் நேருவின் திருச்சி மேற்கு தொகுதியையும், அமைச்சர் அன்பில் மகேஷின் திருவெறும்பூர் தொகுதியையும் கம்யூனிஸ்டு கட்சிகள் கேட்பதாக கூறப்படுகிறது.
அதாவது, இந்த 2 தொகுதிகளிலும் கிளை அமைப்பு வரை கட்சி வலுவாக இருப்பதாக 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் கருதுகிறதாம். ஏற்கனவே, கேட்கும் தொகுதிகளை கொடுக்க மாட்டோம் என திமுக நிர்பந்திப்பதாக கூறப்படும் நிலையில், கம்யூனிஸ்டுகளுக்கு இந்த தொகுதிகள் ஒதுக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இருப்பினும், சட்டசபைத் தேர்தலில் மதிமுகவின் முக்கிய நிர்வாகியான மருத்துவர் ரோஹைய்யா ஷேக் முகமதுவுக்கு திருச்சியில் ஒரு தொகுதியை பெற்றுக் கொடுத்திட வேண்டும் என்பதில் துரை வைகோவும் தீவிரமாக இருக்கிறார். ஆனால், திருச்சியில் உள்ள 9 சட்டசபைத் தொகுதிகளையும் திமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என்று இரு தரப்பில் திமுக தலைமையிடம் தெளிவாக கூறி இருப்பதாக கூறப்படுகிறது.
