தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023 செப்டம்பர் மாதம் முதல் அப்போதைய திமுக அரசால் மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமாக தொடங்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற 2026 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, திமுக மற்றும் அதிமுக தலா ரூ.2,000 வழங்குவதாகவும், தவெக ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்குட்பட்ட அனைத்து தகுதியுள்ள பெண்களுக்கும் மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகும், முன்பிருந்த ரூ.1,000 உரிமைத்தொகை திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், தேர்தல் வாக்குறுதிப்படி ரூ.2,500 எப்போது வழங்கப்படும் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பி வந்தன.
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரியிடம், “ரூ.2,500 எப்போது வழங்கப்படும்?” என்று பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர், தற்போது ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை எந்த தடையும் இன்றி வழங்கப்பட்டு வருவதாகவும், தேர்தல் வாக்குறுதியின்படி அதை ரூ.2,500 ஆக உயர்த்தி விரைவில் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், ரூ.2,500 வழங்குவது எப்போது அமலுக்கு வரும், தகுதி விதிகளில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து அமைச்சர் ஜெகதீஸ்வரி எதுவும் தெரிவிக்கவில்லை.
