திருவள்ளூரில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர் அளித்துள்ள வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டை என்ற பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 12-ம் தேதி வழக்கம் போல பள்ளி முடிந்து சிறுமி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சிறுமியை பின் தொடர்ந்த நபர் ஒருவர் சிறுமியின் வாயை அடைத்து, தூக்கி சென்றுள்ளார்.

பின்னர் அங்கிருந்த மாந்தோப்புக்குள் சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதே நேரம் குற்றவாளியை கைது செய்ய 30 தனிப்படை போலீசார் 14 நாட்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த அந்த இளைஞரை, ஆந்திராவின் சூலூர்பேட்டை ரயில் நிலையம் அருகே தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் உட்பட பிற விவரங்கள் எதுவும் இதுவரி வெளியிடப்படவில்லை. கைது செய்யப்பட்ட அந்நபர் சூலூர் பேட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார்.

கஞ்சா போதைக்கு அடிமையான அந்த இளைஞர் ஹோட்டலுக்கு செல்லாமல் தொடர்ந்து விடுமுறை எடுத்து வந்துள்ளார். வாரந்தோறும் சனிக்கிழமை விடுமுறை எடுத்து தமிழக எல்லைப் பகுதியான கிராமங்களுக்கு சுற்றுலா வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். சம்பவத்தன்று அதாவது கடந்த 12-ம் தேதி அந்த இளைஞர் கும்மிடிப்பூண்டிக்கு வந்தது உறுதியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட இளைஞரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் போலீசார் காண்பித்து குற்றவாளியை உறுதிப்படுத்தினர். குற்றவாளி கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், சிறுமியின் உறவினர்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையதிதில் குவியத் தொடங்கினர். இதனால் அந்த இளைஞரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தேடப்படும் நபரின் அடையாளங்கள், கைதாகியுள்ள இளைஞருடன் ஒத்துப்போகிறது. முதற்கட்டமாக சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்ட விசாரணை தொடர்ந்து நடத்தப்படும். இளைஞரை சிறையிலடைப்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபருக்கு 30 வயது இருக்கலாம். இந்த வழக்கை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது. முக்கியமான வழக்கு என்பதால் முறையான விசாரணைக்கு பின் உறுதி செய்யப்பட்டு முழு விவரங்கள் அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

கைதான வடமாநில இளைஞர் மீது கும்மிடிப்பூண்டி மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியை வன்கொடுமை செய்ததாக கைதான இளைஞர் போலீசாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version