2 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். மாலத்தீவில் இருந்து தனி விமானம் முலம் இன்று இரவு 7.50மணிக்கு தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கவுள்ளனர். ரூ.452கோடி செலவில் விரிவாக்கம் செயப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இதற்கான விழா இரவு 8 மணியளவில் நடைபெறவுள்ளது. பின்னர் விமான நிலையத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு ரயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,030கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலை துறையால் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,571கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என ரூ.4,800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

இவ்விழாவை முடித்த பிறகு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி செல்லவுள்ளார். இரவு 10.30 மணி அளவில் திருச்சிக்கு வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பிறகு பிரதமர் மோடி கார் மூலம் சென்று திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். நாளை (ஞாயிற்றுகிழமை), அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

இதற்கிடையில் திருச்சியில் இன்று இரவு 10.45 மணிக்கு திருச்சி சுற்றுலா மாளிகையில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமியுடன், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், அதிமுக துணைப் பொதுச்செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் செல்வார்கள் என்று கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version