தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்க, திமுக எம்.பி.க்களின் அவசரக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 15) காலை 11 மணிக்கு கூட்டியுள்ளார்.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை 1971ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் 543 உறுப்பினர்களுடன் செயல்பட்டு வருகிறது. 1971ஆம் ஆண்டு 55 கோடியாக இருந்த இந்திய மக்கள் தொகை தற்போது 140 கோடியாக உயர்ந்த நிலையில், அதற்கேற்ப எம்பிக்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மாநிலங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்தும் மத்திய அரசின் தொகுதி மறுவரையறை சட்டத் திருத்தத்திற்கு, மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு முன் கடந்த 2002ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை சட்டத்திருத்தத்தில், 2026க்குப் பிறகு நடக்கும் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போதைய மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கொண்டு, தொகுதிகளை சீரமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ற வகையில் தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக நாளை மற்றும் நாளை மறுதினம் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. தொகுதி மறுவரையறை சட்டத் திருத்த வரைவு மசோதாவின் நகல் வெளியான நிலையில், அதில் மாநில மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கை, 543ல் இருந்து 850 ஆகவும், யூனியன் பிரதேச எம்பிக்களின் எண்ணிக்கை 20ல் இருந்து 35ஆகவும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகளிர் இடஒதுக்கீட்டை 2029 மக்களவைத் தேர்தலிலேயே அமல்படுத்த முடிவெடுத்துள்ள மத்திய அரசு, தொகுதி மறுவரையறை மசோதாவுடனேயே, மகளிர் இடஒதுக்கீடு சட்டத் திருத்த மசோதாவையும் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் புதிய தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவின் படி 2011 அல்லது அதற்கு முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகளின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
இதனால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களை காட்டிலும், மக்கள் தொகையை முறையாக கட்டுப்படுத்தாத உத்தர பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களின் பலம் நாடாளுமன்றத்தில் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் தற்போதைய மக்களவை எம்பிக்களின் எண்ணிக்கை 39ஆக உள்ள நிலையில், புதிய தொகுதி மறுவரையறை மசோதா மூலம் உறுப்பினர் எண்ணிக்கை 50ஆக வரை உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் உத்தர பிரதேசத்தில் தற்போது உள்ள 80 மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 143 வரை உயரக்கூடும் என்பதால், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவம் குறையும் எனச் சொல்லப்படுகிறது.
புதிய தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், சட்டத் திருத்தத்தை கைவிடா விட்டால் பழைய திமுகவை காண நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேநேரம், தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு இருக்காது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இடையே, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள திமுக எம்பிக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.  தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்க, திமுக எம்.பி.க்களின் அவசரக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 15) காலை 11 மணிக்கு கூட்டியுள்ளார்.
இன்றைய கூட்டத்தில், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும், தென்மாநிலங்களின் கூட்டமைப்பை உருவாக்கி இந்தப் பாதிப்பைத் தேசிய அளவில் எதிர்க்கவும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version