தமிழ்நாட்டில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின்சார வாரியத்திற்கு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியானது. மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிப்படி, ஆண்டு தோறும் மின் கட்டண உயர்வு நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. 2024 ஜூலை மாதம் 4.8 சதவீதம் அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து கடன் உற்பத்தி தேவை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு நிகழாண்டு 3 சதவீதம் முதல் 3.16 சதவீதம் வரை மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டு வருவதாக செய்திகள் உலா வந்தன. மின் கட்டணத்தை உயர்த்தினால் மட்டுமே கடன் அளவை குறைக்க முடியும் என்ற சூழல் இருப்பதால், ஜூலை முதல் தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வரும் என சமூக வலைதளத்தில் செய்திகள் பரவின.
இதற்கு விளக்கமளிக்கும் விதமாக மின்வாரியத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”மின் கட்டண உயர்வு குறித்து எவ்வித ஆணையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிடவில்லை. கடந்த சில நாட்களாக ஊடகங்களில் மின் கட்டண உயர்வு குறித்து அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது”.
”ஒழுங்குமுறை ஆணையம், மின்கட்டணம் தொடர்பான ஆணை வழங்கிடும்போது, அதனை நடைமுறைப்படுத்துகையில் வீட்டு மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் கூடாது எனவும், தற்போது வழங்கப்படும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்” என அமைச்சர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.