டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தென் மண்டலத் தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ”புதுச்சேரி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய வடதமிழக கடலோர பகுதிகளில் நிலவிய ‘டிட்வா’ புயல் வடதிசையில் நகர்ந்து, இன்று காலை 11.30 மணி அளவில் கடலூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 100 கிமீ தொலைவிலும், காரைக்காலுக்கு வடகிழக்கே 110 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு-தென்கிழக்கே 100 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கு-தென்கிழக்கே 170 கிமீ தொலைவிலும் நிலை கொண்டிருந்தது.
அப்போது புயலுக்கும், வடதமிழக-புதுச்சேரி கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 80 கிமீ ஆக இருந்தது. டிட்வா புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகம் புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் நகரக்கூடும். அவ்வாறு நகரும்போது டிட்வா புயலின் மைய பகுதி வடதமிழகம்-புதுச்சேரி கடற்கரையிலிருந்து குறைந்தபட்ச தூரம் இன்று 30ம் தேதி நவம்பர், மாலை, 30 கி. மீ. -ஆக இருக்க வாய்ப்புள்ளது.
டிட்வா புயலானது இன்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. வலுகுறைந்து வடக்கு நோக்கி நகர்ந்து தென் ஆந்திர கரையை நோக்கி நகரக்கூடும். டிட்வா புயல் தாக்கத்தினால் திருவள்ளூர், ராணிப்பேட்டை 2 மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் கனமழை வாய்ப்புள்ளது. நாளை மழையின் தாக்கம் குறைந்து விடும். வருகிற 6 ஆம் தேதி வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இன்று வங்கக்கடலில் அதிகபட்சமாக 60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளி காற்று 90 கிமீ வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள், தென் ஆந்திர கடலோரப் பகுதிகள், புதுவை மன்னார் வளைகுடா பகுதிகள், தமிழக கடலோர மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
நாளை காலை காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மிக கனமழை 17 இடங்கள், கனமழை 65 இடங்களில் பெய்துள்ளது” என கூறினார்.
