சன் டிவி பங்குகள் தொடர்பாக அண்ணன் கலாநிதி மாறனுக்கு, தம்பியும், திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். பங்குகள் விவகாரத்தில் 2003-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையை தொடர வேண்டும் என்று அந்த நோட்டீசில் அவர் வலியுறுத்தி உள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இது தயாநிதி மாறன் அனுப்பும் 2-வது நோட்டீஸ் ஆகும்.
இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி குழுமங்களில் முக்கியமானது சன் குழுமம் ஆகும். இதனை மறைந்த முரசொலி மாறனின் மகன் கலாநிதி மாறன் நடத்தி வருகிறார். இந்தியாவின் பில்லியனர்களில் இவர் ஒருவர் ஆவார். இவருடைய சகோதரரும் முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய திமுக எம்.பி.யுமான தயாநிதி மாறன் தான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
தவறான நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத பணபரிமாற்ற விவகாரம் போன்றவற்றில் சன் குழுமம் ஈடுபட்டுள்ளதாக அந்த நோட்டீசில் தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டி உள்ளார். 2003-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பங்குதாரர்கள் முறைமையை பின்பற்ற வேண்டும் என்று அந்த நோட்டீசில் அவர் வலியுறுத்தி உள்ளார்.
கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி உள்ளிட்ட 7 பேருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 10-ந் தேதி இந்த நோட்டீசை தயாநிதி மாறன் அனுப்பி உள்ளார். சென்னை சாந்தோமில் இயங்கி வரும் வழக்கறிஞர் சுரேஷ் என்பவருக்கு சொந்தமான லா தர்மா (LAW DHARMA) என்ற நிறுவனம் சார்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கலாநிதி மாறனும், காவேரி மாறனும் ஏமாற்றும் நோக்கில் வஞ்சனையோடு நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தையும் சுயலாபத்திற்காக பயன்படுத்தி உள்ளீர்கள். இது முழுக்க முழுக்க கலாநிதி மாறனின் சூழ்ச்சி என்றும் இதற்கு எஞ்சிய 7 பேரும் உடந்தையாக இருந்ததாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
என் கட்சிக்காரர் (தயாநிதி மாறன்) தந்தை முரசொலி மாறன் உடல்நலிவுற்று நோய்வாய்பட்டிருக்கும் போது அந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு கலாநிதி மாறன், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியின் ஒரு பகுதியாக 2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டத்திற்கு புறம்பான உங்கள் வேலையை ஆரம்பித்தீர்கள்.
முரசொலி மாறன் மறைந்தபிறகு இறப்புச் சான்றிதழ் இல்லாமலேயே வாரிசுதாரர்கள் பற்றிய உயில் விவரங்கள் இல்லாமலேயே தாயார் மல்லிகா மாறனுக்கு சொத்துக்கள் உரிமை அளிக்கப்பட்டுள்ளது. முரசொலி மாறன் மறைந்த சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்தே இறப்புச் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. இந்த பரிமாற்றம் சட்டவிரோதமாக கலாநிதி மாறனுக்கு சொத்துக்கள் போய் சேர்வதற்கு உடந்தையாக இருந்துள்ளது.
2003-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந் தேதி 10 ரூபாய் மதிப்பு கொண்ட 12 லட்சம் பங்கு பங்குகளை (3EQUITY SHARES) கலாநிதி மாறன் தன் பெயருக்கு ஒதுக்கீடு செய்து கொண்டுள்ளார். நம்பிக்கையை மீறும் வகையிலான குற்றவியல் ஏமாற்று நடவடிக்கை இது என்று அந்த நோட்டீசில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஏனெனில் அக்காலக்கட்டத்தில் அந்த பங்குகளின் மதிப்பு ரூ.2,500-ல் இருந்து ரூ.3,000-க்குள் இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால் சன் குழுமத்தின் 60 சதவித பங்குகளை வெறும் ரூ.10 மதிப்பு கொண்ட பங்குகள் என குறிப்பிட்டு பங்குதாரர்கள் யாரிடமும் கலந்து பேசாமல், ஒப்புதல் பெறாமல் தன் பெயருக்கு கலாநிதி மாறன் ஒதுக்கீடு செய்து கொண்டுள்ளார்.
அந்த நேரத்தில் சன் குழுமமானது எந்தவித நிதி நெருக்கடியிலும் இல்லை, அப்படி இருக்கும் போது 10 ரூபாய் என பங்குகளை குறிப்பிட்டு வாங்கிக் கொண்டது எந்த விதத்தில் சரி?
அதற்கு முன்பாக கலாநிதி மாறனுக்கு என எவ்வித பங்குகளும் அதில் இல்லை. இந்த நடவடிக்கையின் மூலம் சன் குழுமத்தின் பிரதான பங்குதாரர் என்ற நிலையை அவர் அடைந்துவிட்டார். குடும்ப உறுப்பினர்கள் வசம் இருந்த 50 சதவிதம் என்ற அளவு வெறும் 20 சதவிதமாக இதனால் குறைந்து விட்டது.
கலாநிதி மாறன் தற்போது சன் குழுமத்தின் பட்டியலிடப்பட்ட பங்குகளில் 75 சதவிதத்தை தன் வசம் வைத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 2.9 பில்லியன் டாலர்கள் ஆகும். இதன்மூலம் இந்தியாவின் மாபெரும் பணக்காரர்கள் வரிசையில் அவர் இடம்பிடித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகள் நிறுவன மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ், பணமோசடி உட்பட கடுமையான குற்றங்களாகக் கருதப்படுவதால், தயாநிதி மாறன் அரசாங்க விசாரணையை தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (Serious Fraud Investigation Office – SFIO) கோருவார் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது
“12,00,000 பங்குகளை ஒதுக்குவதற்காக ரூ. 1.2 கோடி செலுத்தப்பட்டதாகக் கூறப்படும் தொகைக்கும், சம்பந்தப்பட்ட நேரத்தில் ரூ. 3500 கோடி மதிப்பிலான 12,00,000 பங்குகளின் உண்மையான தோராயமான மதிப்புக்கும் இடையிலான வித்தியாசத் தொகை, குற்றத்தின் வருமானத்தைத் தவிர வேறில்லை. நீங்கள் அனைவரும் ரூ. 3498.8 கோடியை வைத்திருக்கிறீர்கள், இது கறைபடாத ஒன்றைப் போலவே உள்ளது, எனவே நீங்கள் அனைவரும் தொடர்ந்து பணமோசடிச் செயலைச் செய்கிறீர்கள்.. ” 2023 ஆம் ஆண்டில் ரூ.5,926 கோடியும், 2024 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.455 கோடியும் ஈவுத்தொகையாக கலாநிதி பலன்களைப் பெற்றுள்ளதாக நோட்டீஸ் குற்றம் சாட்டுகிறது.
இந்த நோட்டீஸ், கருணாநிதி மற்றும் மாறன் குடும்பங்களுக்கு இடையேயான முந்தைய தகராறையும் நினைவூட்டுகிறது. அதாவது, சன் டிவியில் எம்.கே. தயாளுவின் பங்குகளை ரூ.100 கோடிக்கு வாங்குவதன் மூலம், ஐபிஓ (IPO)வுக்குப் பிறகு நிறுவனத்தின் மதிப்பு மிக அதிகமாக இருந்தபோது, தங்களை ஏமாற்றியதாக கருணாநிதி குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியதை இந்த நோட்டீஸ் குறிப்பிடுகிறது.
மேலும், 2024 அக்டோபர் 7 ஆம் தேதி அனுப்பப்பட்ட முந்தைய நோட்டீஸில் தெளிவற்ற பதில் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து கலாநிதி iமாறன் தனது மற்றொரு சகோதரி அன்புக்கரசிக்கு 500 கோடி ரூபாய் வழங்கியதாகவும் தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.
இந்த நோட்டீஸ் குறித்து கலாநிதி மாறன் தரப்பில் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் செல்வாக்கு மிக்க சகோதரர்கள் இடையே வெடித்துள்ள இந்த சொத்துப்பிரச்னை அரசியலிலும் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.