திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீயபுரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் முசிறி வருவாய்க் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. மதுரையை பூர்வீகமாக கொண்டவர் ஆரமுத தேவசேனா(52). திருச்சி மாவட்டத்தில் உள்ல முசிறியில் வருவாய்க் கோட்டாட்சியராகப் பணியாற்றி வந்தவர்.
இவர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று (20.06.2025) நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தேவசேனா தனது அரசு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஜீயபுரம் பகுதிக்கு வந்த போது, திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து சாலையின் நடுப்பகுதியை தாண்டி வந்ததால், எதிரே வந்த ஆர்.டி.ஓ வாகனம் பக்கவாட்டில் மோதி விபத்தில் சிக்கியது.
இதனால் நிலைதடுமாறிய வாகனம் சாலையோரம் நின்ற ஜே.சி.பி மீது விபத்தில் சிக்கியது. இதில் ஆர்.டி.ஓ ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வாகன ஓட்டுநர் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தேவசேனாவின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு அதிகாரி ஒருவர் விபத்தில் உயிரிழப்பது இது முதல் முறை அல்ல. கடந்த 2018-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் வில்லாரோடை மற்றும் ஆம்பூர் பகுதியில் உள கோரையாற்றில் நடந்த மணற்கொள்ளையை தடுக்க சென்ற விராலிமலை தாசில்தார் பார்த்திபன் குளவாய்ப்பட்டி அருகே காரின் முன்பக்க டயர் வெடித்ததில் கார் கட்டுபாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள புளிய மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் தாசில்தார் பார்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதேப் போல் கடந்த 2023-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் பச்சமலை பகுதியில் திமுக நிர்வாகி ஒருவர் மணற்கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். இதனை தடுக்க சென்ற துறையூர் வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், மணற்கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனங்களின் சாவியை பறித்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த திமுக நிர்வாகி மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிரபாகரனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இவர்களின் வரிசையில் தொட்டியம் பகுதியில் மணற்கொள்ளை, செம்மண் கடத்தல் போன்றவற்றை விசாரித்து வந்த ஆரமுத தேவசேனா விபத்தில் உயிரிழந்த சம்பவம் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறது.