சிபிஐ மூலம் என்.டி.ஏ. கூட்டணியில் தவெக இணைய தங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில் இல்லை என செங்கோட்டையன் கூறியுள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணியில் விஜய் இணையப்போவதாகவும், தவெகவுக்கு 50 சீட்டுகள் ப்ளஸ் துணை முதல்வர் பதவி என டீலிங் பேசப்படுவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தவெக நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளரும்,முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், டெல்லியில் நடந்த சி.பி.ஐ. விசாரணையில் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் உரிய பதிலை அளித்துள்ளார்.
முதல்-அமைச்சராக செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டு மக்கள் பணிக்காக விஜய் அரசியலுக்கு வந்துள்ளார். தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் திரண்டு வருகிறார்கள். இது தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதையே காட்டுகிறது.
மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சரியாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழலே நிலவுகிறது. தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர். அந்த மாற்றத்தை கொண்டு வரக்கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது.
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வகையில் சிறந்த வேட்பாளர்கள் தமிழக வெற்றிக்கழகத்தில் உள்ளனர். தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழகம் என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்தால் விஜய்க்கு துணை முதல்-அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் வருகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்த செங்கோட்டையன், விஜய் முதல்-அமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார். துணை முதல்-அமைச்சர் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
