திருப்பூரில், 2 கோடி ரூபாய் கட்டிடத்தை அபகரிக்க உடந்தையாக, அதிகார துஷ்பிரயோகம் செய்த துணை தாசில்தாரர், சார் – பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்க, பனியன் கம்பெனி பங்குதாரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், வீரபாண்டி கிராமத்தில் வெங்கடாச்சலம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாடகைக்கு பெற்று, ஜெகன்நாதன் என்பவர் பனியன் கம்பெனி துவங்கினார். இந்த நிலத்தில் 2 கோடியே 3 லட்சம் ரூபாய் செலவிட்டு, கட்டிடங்கள், இயந்திரங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.

வாடகை ஒப்பந்தம் புதுக்க முயற்சித்த போது, உடன்பாடு எட்டப்படாததால், கட்டுமானங்களுக்கு செலவிட்ட 2 கோடியே 3 லட்சம் ரூபாயை திருப்பித் தராமல், நில உரிமையாளர் வெங்கடாச்சலம், அவரது மனைவி துணை தாசில்தாரர் கீர்த்தி பிரபா, காவல் ஆய்வாளர் கணேசன் மிரட்டல் விடுத்ததாகக் கூறி, ஜெகன்நாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், தொழிற்சாலை அமைந்திருந்த நிலத்தை மோசடியாக, விவசாய நிலம் என கூறி, துணை தாசில்தாரர் கீர்த்தி பிரபாவுக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நல்லூர் சார் பதிவாளர் நாகராஜன் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் பதவியை தவறாக பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட துணை தாசில்தாரர் கீர்த்தி பிரபா, காவல் ஆய்வாளர் கணேசன், சார் – பதிவாளர் நாகராஜன் உள்பட ஐந்து அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு தான் முடிவெடுக்க முடியும். மூன்றாவது நபர் கேட்க முடியாது. அதிகாரிகள் குற்றத்தில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கையை எடுக்கலாம் என மனுதார்ருக்கு அறிவுறுத்தி, வழக்கை முடித்து வைத்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version