பிரதமர்மோடியால் சாதிக்க முடியாததை, அதிமுக அரசால் சாதிக்க முடியாததை, மற்ற மாநில முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை, திராவிட மாடல் அரசு செய்து வருவதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கும் விழா முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நகர்ப்புற ஊரக பகுதிகளில் 20 ஆயிரத்து 21 பயனாளிகளிக்கு ஆயிரத்து 672 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 41 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு 205 கோடுயே 56 லட்சம் மதிப்பீட்டில் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதற்கு பின்பாக 17 லட்சத்து 74 ஆயிரத்து 561 வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், நேற்று தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கப்போகும் மாநில கல்வி கொள்கையை வெளியிட்டதாகவும், முதன்மை கல்வி நிறுவனங்களை சேர்ந்திருக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்ததாக கூறினார்.
மேலும், கல்வி மருத்துவம் தான் திராவிட மாடல் அரசின் இரு கண்கள் என கூறிய அவர், பட்டா வழங்குவதில் நான் எப்போதும் தனி கவனம் செலுத்துவேன் என்றும் கூறினார். நிலம் தான் அதிகாரம் எனக் கூறியவர் காலுக்கு கீழே நிலமும் காலுக்கு கீழே குறையும் இருப்பது பலருக்கு இன்றும் கனவு தான் என்றார்.
திமுக ஆட்சி அமைந்து 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 17,74,561 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு உள்ளதாகவும், பல லட்சம் மக்களின் கனவுகளை திமுக அரசு நிறைவேற்றி உள்ளதோடு, பொருளாதாரத்தில் திமுக தலை நிமிர்ந்து உள்ளது என்றார்.
நாட்டில் எந்த மாநிலத்திலும் இந்த வளர்ச்சி இல்லை என கூறிய அவர், நாட்டின் வளர்ச்சியிலும் நாம் தான் மிஞ்சி உள்ளோம், இது தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி எனவும், 10 ஆண்டு பின்னோக்கி சென்ற தமிழ்நாட்டை நாம் வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.
அறிவு ஜீவி மாதிரி அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார் எடப்பாடி என கூறிய அவர், உங்களுக்கு என்ன வயிற்றெரிச்சல் என்றால் மோடியால் சாதிக்க முடியாததை, மற்ற மாநில முதலமைச்சர்கள் சாதிக்க முடியாததை, திராவிட மாடல் அரசு செய்துள்ளது என கூறினார்.
என்னை பொருத்தவரை மக்களுக்காக உழைப்பவன்,மக்கள் என்னை நம்பி ஒப்படைத்துள்ளனர்,மக்களின் நம்பிக்கையுடன் எங்கள் பயணம் தொடரும் என்றும், இது தான் வளர்ச்சி இது தான் வழி என்று இந்தியாவே சொல்லும் அளவிற்கு 2.0 ஆட்சி இருக்கும் எனவும் முதலமைச்சர் திட்டவட்டமாக கூறினார்.