திருப்பரங்குன்றம் மலை மேல் பக்தர்கள் செல்ல 20 நாட்களுக்கு பிறகு மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலைக்கு செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதாவது, மலையில் உள்ள தர்காவில் நடக்கும் சந்தனக்கூடு விழாவிற்கு இஸ்லாமியர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

தற்போது, மதுரை திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசல் மற்றும் மலையில் உள்ள தர்காவில் வருகிற 6-ந் தேதி சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது.  இதற்காக நேற்று இரவு 8.30 மணியளவில் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதியில் உள்ள பள்ளிவாசலில் இருந்து மின்னொளியுடன் கூடிய அலங்கார வண்டியில் பிறை கொடி எடுத்து வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இதை தொடர்ந்து மற்றொரு பிறை கொடியும் எடுத்து செல்லப்பட்டது. பெரிய ரதவீதி, கோட்டை தெரு வழியாக அந்த கொடி மலைக்கு எடுத்து செல்லப்பட்டு தர்காவில் அமைத்த கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. 

இந்நிலையில் 20 நாட்களுக்கு பிறகு மதுரை திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை, செல்போன் எண்ணை கொடுத்துவிட்டு திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லலாம் என்று காவல் உதவி ஆணையர் சசிபிரியா தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version