தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் திருக்கோவிலில் ஆடி மாதம் நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூர் சுரபி நதிக்கரையில் சுயம்பு ஸ்ரீ சனீஸ்வரர் பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. தமிழகத்திலேயே சனி பகவானுக்கு என்று தனி கோவிலாக திருநள்ளாறிலும்,குச்சனூரிலும் மட்டும்தான் அமைந்துள்ளது.
இந்த தளத்தில் சனி பகவான் மூலவராகவும் உற்சவர்ராகவும் காட்சியளிக்கிறார்.இந்து சமய அறநிலையத் துறையின் பராமரிப்பில் உள்ள இந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் திருவிழா மிக விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் இந்த வருட ஆடி திருவிழாவில் ஆடி மாதம் நான்காம் சனிக்கிழமையாகவும் இந்த மாதத்தில் கடைசி சனிக்கிழமையாகவும் உள்ள இன்று குச்சனூர் சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோவிலில் வழிபட ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்கினர்.
சுரபி நதியில் புனித நீராடிய பக்தர்கள் எள் தீபம் வைத்தும் பொறி படைத்தும், காக்கை வடிவிலான மண் சிலைகளை வைத்தும் பக்தர்கள் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருகின்றனர்.இதனையடுத்து ஆகஸ்ட் 11 ஆம் தேதியன்று சோனை முத்தையா கருப்பண்ணசாமிக்கு மது படையல் மற்றும் கறி விருந்துடன் இந்த வருட ஆடி சனிவார திருவிழா நிறைவு பெறுகின்றது.
ஆடி மாதம் நான்காம் சனிக்கிழமையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி கேரள, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குச்சனூர் சனீஸ்வரர் பகவான் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்….
