தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்த அதிரடிகள் அரங்கேறி வரும் சூழலில், அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் சபாநாயகருமான தனபால் அக்கட்சியில் இருந்து விலகியதும், அவரது மகனுக்கு தவெக அமைச்சரவையில் இடம் கிடைத்திருப்பதும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தனித் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்கு தற்போது புதிய அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அதற்குப் பிந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் சபாநாயகராகப் பணியாற்றியவர் தனபால். குறிப்பாக, அதிமுகவில் பிளவு ஏற்பட்ட காலகட்டத்தில் சபாநாயகராக இருந்து அப்போதைய ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்ததில் இவருக்கு முக்கியப் பங்கு இருந்தது.

இருப்பினும், கடந்த தேர்தல் தொகுதிப் பங்கீட்டின் போது தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் தனபால் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்தார். “ஆட்சியைக் காப்பாற்றிக் கொடுத்த எனக்கே கட்சியில் அங்கீகாரம் இல்லையா?” என்ற ஆதங்கம் அவரிடம் இருந்தது.

அதிமுகவில் ஏற்பட்ட இந்த புறக்கணிப்பைத் தொடர்ந்து, தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். அவருக்கு ராசிபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பும் வழங்கப்பட்டது.

தற்போது தேர்தலில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அவரை வெறும் எம்.எல்.ஏ-வாக மட்டும் நிறுத்தாமல், தனது அமைச்சரவையில் இணைத்து அழகு பார்த்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட கொங்கு மண்டலத்தில், அக்கட்சியின் மிக முக்கிய பட்டியலின முகமாக இருந்த தனபாலின் குடும்பத்தை தவெக தங்கள் பக்கம் இழுத்துள்ளது. மேலும், அவரது மகனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டிருப்பது, கொங்கு பகுதியில் அதிமுகவின் அடித்தளத்தை பலவீனப்படுத்தும் தவெக-வின் மிக முக்கிய அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version